கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இன்று மாலை ஒத்திவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்ட 23 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் நாகராஜா பிரசாந்தன் அன்றைய தினமே இகாணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாகராஜா பிரசாந்தனின் தந்தையால் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் நாகராஜ் பிரசாந்தன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், கொக்கட்டிச்சோலை – முன்னைக்காடு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்களும் கடந்த ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சந்தேகநபர்களில் ஒருவர் இன்று முனைக்காடு பொது மயானத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, பெக்கோ மூலம் சடலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஸ்வான், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் பணிகள் இடம்பெற்றன.

எனினும், இதன்போது சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் முனைக்காடு பொது மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்