தெரிவுக்குழுவை இடைநிறுத்த மைத்திரிக்கு அதிகாரமில்லை! – ராஜித பதிலடி

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.”
இவ்வாறு தெரிவித்தார் சுகாதார அமைச்சரும் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான ராஜித சேனாரரத்ன.

அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத்தின் தீர்மானத்துக்கமையவே தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தார். அதன் விசாரணை தற்போது எவ்வித தடங்கலுமின்றி நடைபெற்று வருகின்றது.  தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும். நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி அதில் தலையிட முடியாது.

தெரிவுக்குழு விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. விசாரணையின் நிறைவில் வெளியிடப்படும் அறிக்கை மிகவும் காத்திரமானதாக இருக்கும்.  விசாரணைக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவரும் சாட்சியமளித்தே ஆகவேண்டும். சாட்சியமளிக்க மறுப்புத் தெரிவிப்பவர்கள் மீது சந்தேகம் எழும். அதேவேளை, அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றம் சட்ட நடவடிக்கையும் எடுக்கும்.

தெரிவுக்குழு விசாரணையின் நம்பகத்தன்மையை மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே  அமர்வுகளின்போது ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படுகின்றன. இதனை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.

தெரிவுக்குழு விசாரணை ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கை அல்ல. உண்மையை அறிவதும் குற்றவாளிகளை இனங்காணுவதுமே இதன் நோக்கமாகும்.  குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்