பொலிஸ் அதிகாரி கொலை விவகாரம் – கருணா அணியின் உறுப்பினர் தற்கொலை முயற்சி!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கருணா அணியினரின் உறுப்பினர் சந்திரன் சுப்ரமணியம் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில், அவர் தற்போது சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்தை அருந்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவர், தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் கடுமையாக உடல் நலக்குறைபாட்டிற்கு உள்ளான சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2008ஆம் ஆண்டு கருணா குழு உறுப்பினர்கள் என சந்தேகப்படும் சிலரால் கடத்திக் கொல்லப்பட்ட நிலையில், முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரியவந்திருந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 3 சந்தேகநபர்களை ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி ஆகிய இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சந்தேகநபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இருந்தபோதிலும் சந்தேகநபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் தற்காலிகமாக குறித்த சந்தேநபர்கள் அனைவரும் நேற்று இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர். இந்நிலையிலே நேற்று இரவு இந்த தற்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்