தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம்

தெரிவுக்குழு விவகாரம் குறித்து ஜனாதிபதியும் சபாநாயகரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலமைப்புக்கு இணங்க சுமூகமான தீர்வொன்றுக்கு வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தெரிவுக்குழு விசாரணைகள் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ள முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒருங்கிணைந்த எதிரணியினரும் இணங்கியிருந்தார்கள். அதற்கிணங்கவே தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் இதற்கு ஒத்துழைப்பினை வழங்கவில்லை.

இதனால், இதன் மீதான நம்பிக்கை தொடர்பில் நாம் எவ்வாறான உத்தரவாதத்தை வழங்கினாலும் விமர்சனங்கள் வரும் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அத்தோடு, தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு விமர்சனங்கள் உள்ளன.

எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

இதற்கு முன்னரும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்க அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்த முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். ஜனாதிபதியும், சபாநாயகரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேலும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக தீர்வினை இந்த விடயத்தில் முன்வைக்க வேண்டும் என்பதை நாம் இங்குக் கூறிக்கொள்கிறோம்.

தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் எடுத்த தீர்மானத்தை உடனடியாக நாம் மாற்றிக்கொண்டாலும் சமூகத்தில் பல்வேறு கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக வேண்டியிருக்கும்.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்