அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தும் தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருப்பது ஜனநாயகத்திற்கு பொறுத்தமற்றது எனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு டெக்னிகல் சந்தியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் பேரணியாக கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் வரை சென்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கெதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, விஜித ஹேரத், சுனில் அந்துனெத்தி, ஜயந்த ஜயதிஸ்ஸ மற்றும் லால் காந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சுமார் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், மருதானை மற்றும் புறக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்