நீண்டகால உழைப்பு, போராட்டம் என்பவற்றின் பின்தான் தமிழ்மொழி அரசகரும மொழி எனும் அந்தஸ்தைப் பெற்றது

(இலங்கதை; தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்)

நீண்டகால உழைப்பு, போராட்டம் என்பவற்றின் பின்தான் நமது தமிழ் அதற்குரிய அந்தஸ்தான அரசகரும மொழி எனும் அந்தஸ்தைப் பெற்றது. இந்த வரலாற்றை அறிந்திருத்தல் ஒவ்வொரு தமிழ் மகனின் தலையாய பொறுப்பாகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்

.

அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற அரச மொழிகள் தின நிகழ்வில் தமிழ்மொழி அரசகரும மொழி அந்தஸ்தினைப் பெற்றமை தொடர்பில் விளக்கவுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மொழி தான் நிலம் மொழியை இழந்தால் நிலத்தை இழப்போம் என சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்த அடியார்க்கு நல்லார் இயம்புகின்றார். இவ்வகையிலே நம் தாய்மொழியாம் தமிழ்மொழி காத்திடல் நமது தலையாய கடமையாகும். ஈழத்திருநாட்டில் இக் கடமை மிகமிகக் கனமானதாக இருந்தது. நீண்டகால உழைப்பு, போராட்டம் என்பவற்றின் பின்தான் நமது தமிழ் அதற்குரிய அந்தஸ்தான அரசகரும மொழி எனும் அந்தஸ்தைப் பெற்றது. இந்த வரலாற்றை அறிந்திருத்தல் தமிழ்மொழி எதிர்நோக்கியிருந்த ஆபத்துக்களை அறிந்து கொள்வதாக அமையும். அதேவேளை தமிழ்மொழி காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்வதாயும் அமையும்.

ஒரு காலத்தில் தமிழ் மொழி தீவெங்கணும் செம்மையான இடத்தைப் பெற்றிருந்தது. 1409 பெப்ரவரி 15ல் சீன கடற்படைத்தளபதி செங் ஹீ அவர்களின் ஏற்பாட்டில் செதுக்கப்பட்டதும், காலியில் கண்டெடுக்கப்பட்டதுமான சாசனம் இலங்கையின் தென்பகுதியில் தமிழினம் உயரிடம் பெற்றிருந்தமையைக் காட்டுகின்றது.

தமது கடற்பயணத்திற்கு இந்துத் தெய்வங்களின் துணை வேண்டி இச்சாசனம் வரையப்பட்டுள்ளது. இது சீனம், பாரசீகம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் செதுக்கப்பட்டுள்ளது. சீனம், குறித்த தளபதியின் தாய்மொழி. பாரசீகம் அக்காலத்தில் வணிகத் துறையில் முக்கித்துவம் பெற்றிருந்த மொழி. இம்மொழிகளோடு தமிழ் மொழி இடம்பெற்றிருப்பது காலியிலும், காலியை அண்டிய பிரதேசங்களிலும் தமிழ் மொழி பெற்றிருந்த முக்கியத்துவத்தையே காட்டுகின்றது.

குருநாகலை ஆட்சி செய்த மன்னனின் அவைக் களத்தில் சரசோதிமாலை என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இச் செய்தி குருநாகல் அரசவையில் தமிழ்மொழி பெற்றிருந்த சிறப்பிடத்தையே காட்டுகின்றது. இதே போல் கண்டி ஸ்ரீ விக்கிரமராஜ சிங்கனின் அரசவைக் கவியாக வலப்பன ஹியுலகெதர பொகதல என்ற கவிஞன் விளங்கினான் என்ற செய்தி அவன் தமிழ் மொழியில் பெற்றிருந்த பாண்டித்தியத்தையும், தமிழ்மொழி கண்டியில் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் காட்டுகின்றது.

இத்தகு சிறப்பிடம் வகித்த எமது தமிழ்மொழி குடியேற்ற ஆட்சிக் காலத்தில் அவ்வக்காலத்தில் ஆட்சி செய்த அந்நியர்களுடைய மொழிகள் பெற்ற முக்கியத்துவத்தால் தனது சிறப்பிடத்தை இழந்தது. இலங்கையில் அந்நியரான ஆங்கிலேயரை வெளியேற்றி நமது நாட்டுக்கே உரிய அரசியலை உருவாக்கும் முயற்சி 1833ஐத் தொடர்ந்து படிப்படடியாக இடம்பெற்று வந்தது. இவ்வகையிலே 1944 மே 22ம் நாள் சட்ட நிரூபண சபையிலே (ளுவயவந ஊழரnஉடை) ஜே.ஆர். ஜெயவாத்தன அவர்கள் சிங்கள மொழியை அரச கரும மொழியாக ஆக்குவதற்கான பிரேரணையை முன்மொழிந்தமை தேசிய மொழிகளை அரச கரும மொழியாக ஆக்குவதற்கான முதல் முயற்சி எனக் குறிப்பிடலாம்.

இப்பிரேரணை வந்த போது அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா அவர்கள் பிரேரணையிலே சிங்களமும் தமிழும் என்ற திருத்தம் இடம்பெற வேண்டும் என்ற திருத்தத்தை முன்மொழிந்தார். சபை ஏற்றுக் கொண்டது இதன் அடிப்படையில் கற்பித்தல், பொதுப் பரீட்சைகள், சட்ட நிரூபண சபையின் சபை நடவடிக்கைகள் என்பன தமிழிலும் சிங்களத்திலும் இடம்பெற வேண்டும் என்பது வலியுத்தப்பட்டது. இருப்பினும், இந்தப் பிரேரணை நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையிலே தான் 1951 யூலை 23ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள் மேற்குறித்த பிரேரணை நடைமுறைக்கு இடப்படாமை தொடர்பில் தமது கண்டனத்தைத் தெரிவித்தார். இதன் பின்னர் 1955ல் என்.எம்.பெரேரா அவர்களால் தமிழும், சிங்களமும் சம அந்தஸ்துடன் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

இதே ஆண்டு யாழ்ப்பாணம் சென்ற அன்றைய பிரதமர் சேர்.ஜோன்.கொத்தலாவல அவர்களுக்கு யாழ்ப்பாணத்திலே பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. வரவேற்புக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் தமிழுக்கும், சிங்களத்துக்கும் அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பிரதமருக்கு முன்வைத்தார். அவ்விதமே செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் வாக்குறுதியளித்தார். ஆனால் கொழும்பு சென்றதும் அங்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களின் காரணமாக தனது வாக்குறுதியை அவர் பின்வாங்குவதாகக் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்திலே இவ்விடயம் விவாதிக்கப்பட்ட போது பண்டாரநாயக்கா அவர்கள் கூறுகையில், ‘சுதேச மொழிகள் எதிர் ஆங்கில மொழி என்றிருந்த போது 1944ல் நான் சுதேச மொழிகளான தமிழும், சிங்களமும் சம அந்தஸ்தைப் பெற்றவையாக இருக்க வேண்டும் என விவாதித்தேன், ஆனால் இப்போதைய நிலைமையில் சிங்களம் எதிர் தமிழ் என்ற நிலைமை காணப்படுவதால் நான் சிங்களத்தின் பக்கம் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் எற்பட்டிருக்கின்றது’ என்று குறிப்பிட்டார்.

இச் சூழ்நிலையிலே தான் 1955 டிசம்பரிலே நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டிலே சிங்களமே அரச கரும மொழி என்றும், தமிழுக்கு நியாயமான பயன்பாடுக்கான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இயற்றப்பட வேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் நிருவாக மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்றும், கல்வி மொழியாக பெற்றோர் விரும்பும் மொழியில் கல்வியூட்டல் இடம்பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே வேளை 1956 பெப்ரவரியில் களனியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் சிங்களம் மட்டுமே அரச கரும மெரியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1956 பெப்ரவரி 20ல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு எங்கணும் ஒரு நாள் முழுமையான கதவடைப்புப் போராட்டத்தை மேற்கொண்டு தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியது.

1957 மே மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது இடது சாரிகளோடு இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைத்துக் கொண்ட மகஜன எக்சத் பெரமுன கட்சியின் தேர்தல் வெளிப்பகர்விலே பண்டாரநாயக்கா அவர்கள் தான் ஆட்சிப் பீடமேறினால் 24 மணித்தியாலத்திலே சிங்களத்தை அரச கரும மொழியாக ஆக்குவதாக பகிரங்கப்படுத்தினார். தேர்தலில் பண்டாரநாயக்காவின் கட்சி அதிக பெரும்பான்மையைப் பெற்றது. இருப்பினும் பண்டாரநாயக்கா அவர்கள் சொன்னபடியே சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக்குவதைத் தவிர்த்து வடக்கு கிழக்கில் தமிழ் மொழி நியாயமான பயன்பாட்டுக்கு உரியதாக இருக்கும் வகையிலும், தொடர்பாடல் தமிழ் மொழியில் இருக்கும் வகையிலும் கல்வி பெற்றோர் விரும்பும் வகையில் இருக்கும் வகையிலும் சட்ட வரைபைச் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கினார். இச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததைத் தொடர்ந்து சிங்களப் பிரதேசங்களில் பண்டாரநாயக்கா தொடர்பில் அதிருப்தி மேலோங்கியது. இவ்வேளையிலே தான் பேராசிரியர் எப்.ஆர்.ஜயசூரிய எனும் புத்த பிக்கு சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக ஆக்குமாறு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக 1956 ஜுன் 05ம் நாளன்று பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக ஆக்குகின்ற அரச கரும மொழிச் சட்டத்தை முன்மொழிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இதனை எதிர்த்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முன்னைய பாராளுமன்றத்துக்கு முன்பாக இருக்கும் காலி முகத்திடலிலே சத்தியாக்கிரக அறவழி நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்தச் சத்தியாக்கிரகம் சிங்களக் காடையர்களால் குழப்பப்பட்டது. தமிழ்த் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்று பிற்பகல் நடைபெற்ற விவாத்தின் போது இடதுசாரி தலைவரான கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் வரலாற்றுக் கூற்றான ‘இரண்டு மொழிகளெனில் ஒரு நாடு, ஒரு மொழி எனில் இரண்டு நாடுகள்’ எனும் வாசகம் கொண்ட தன்னுடைய உரையை நிகழ்த்தினார். வாக்கெடுப்பின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் இடது சாரிக் கட்சிகளும் சட்டமூலத்திற்கு எதிராக 26 வாக்குகளை வழங்கினார்கள். சார்பாக 56 வாக்குகளைப் பெற்று சட்டமூலம் சட்டமாக்கப்பட்டது.

ஆனால், அரசமைப்பிலே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் தீர்மானம் அப்போதிருந்த 95 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 62 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக அமைந்த போதிலும் இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டமை சட்டமுரணானது என்கின்ற விடயத்தை நாம் மனங்கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியின் அந்தஸ்து அங்கீகரிக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களை முன்நிறுத்தி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனது நான்காவது மாநில மாநாட்டை 1956 ஏப்ரல் 17 தொடக்கம் 19ம் நாட்களில் திருமலையிலே நடாத்தியது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக ஊர்காவற்துறை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், திருமலை மற்றும் மன்னார், வவுனியா, திருமலை மற்றும் திருக்கோவில், மட்டக்களப்பு, திருமலை என்ற வியூகங்களிலே திருமலை யாத்திரை என்னும் பேரணி வடக்கு கிழக்கு மாநிலங்களில் நடைபெற்றது. இம்மாநாட்டிலே தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கும் வகையிலாக தீர்மானமொன்றை அரசு எடுக்க வேண்டும் என்றும் அதற்கான காலக்கெடுவாக 1957 ஆகஸ்ட் 20ம் நாளைக் குறிப்பதாகவும் மாநாடு பிரகடணப்படுதியது.

இந்நிலையிலே தான் 1957 ஜனவரி முதலாம் நாள் சிங்கள ஸ்ரீ யினை இலக்கத் தகடுகளில் தாங்கிய பேருந்துகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்தன. தமிழரசுக் கட்சி இளைஞர்கள் உடனடியாகவே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் தலைவர்கள் அவர்களை அமைதிப்படுத்தியதன் பேரில் 1957 ஜனவரி 19ம் நாளன்று அதிகார பூர்வமான ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1957 பெப்ரவரி 04ம் நாள் தமிழர் மாநிலங்களிலே கரிநாளாகப் பிரகடணப்படுத்தப்பட்டு முழு கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்றைய தினம் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திலே பறந்து கொண்டிருந்த சிங்கக் கொடியை அகற்றி கருங்கொடி ஏற்றுவதற்காக மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்த நடராஜன் என்னும் இளைஞன் சிங்களக் காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். தமிழரின் அறப்போராட்டத்தில் முதலாவது வன்கொலையாக இது பதிவு செய்யப்படுகின்றது.

தொடர்ந்து வடகிழக்கிற்கு வரும் மந்திரி மார்களுக்கு எதிராகக் கறுப்புக் கொடிப் போராட்டம் பிரகடணப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வேளையில் தான் பிரதமர் பணடாரநாயக்கா அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். இதற்கான முன்நடவடிக்கையாக 1957 ஏப்ரல் 25ல் தமிழ் மொழியை நியாயமான முறையில் பயன்படுத்துதலுக்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்கும் பிரதமருக்குமிடையிலான சந்திப்புகள் நடைபெற்றன. முதலாவது சந்திப்பு பிரதமரின் கொரகொல்ல வதிவிட வீட்டில் இடம்பெற்றது. அச் சந்திப்பின் போது தந்தை செல்வா பண்டாரநாயக்காவிடம் பின்வருமாறு கூறினார் ‘அதிகம் யோசித்த பின்பே உங்களை சந்திப்பதற்கு நான் இணங்கினேன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் நீங்கள் எதையாவது செய்ய வேண்டும். நாம் இவ்விடயத்தைத் தீர்த்து வைக்காவிட்டால் நம்முடைய காலத்துக்குப் பின் இந்த நாட்டில் மிகப் பெரிய அனர்த்தம் ஏற்படும்’ எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பிரதமர் கூறுகையில், ‘செல்வா உங்களுடைய விடயத்தில் நான் கவனம் செலுத்துகின்றேன். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நான் ஏதாவது ஒன்றைச் செய்வேன்’ என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து 1957 ஜுன் 27ல் பண்டா செல்வா ஒப்பந்தம் உருவாகியது. மொழி தொடர்பாக, வடக்கு கிழக்கில் நிருவாக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் தமிழ் மொழி அமையும் எனக் குறிப்பிடப்பட்டது. பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி போராட்டங்களை முடுக்கி விட்டது. 1958 மார்ச் மாதத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் கண்டி தலதா மாளிகையை நோக்கி எதிர்ப்பு நடை பவனியொன்றைத் தொடக்கினார். டட்லி சேனநாயக்கா அவர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக தாம் உயிரையும் இழக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

இத்தகைய எதிர்ப்புகளுக்கிடையிலும், பண்டா செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1958ம் ஆண்டின் 28ம் இலக்க தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தமிழ் வடக்கு கிழக்கின் கல்வி மொழியாகவும், பொதுப் பரீட்சைகளுக்கான மொழியாகவும், பொதுக் கடிதத் தொடர்பு மற்றும் நிருவாக மொழியாகவும் இருக்கும் என ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சட்டம் சிங்களம் மட்டும் சட்டத்தை மட்டுப்படுத்துவதாக கோசங்கள் எழுந்தன. இச்சட்டத்தின் பிரிவு 06(1)ன் படி இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கான ஒழுங்கு விதிகளை விடயத்திற்கான அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற ஏற்பாடு இருந்தது.

இதே வேளை 1958 ஏப்ரல் 09ம் நாளன்று பிக்குமார் சிலரும் அன்றைய சுகாதார அமைச்சர் விமலா விஜயவர்த்தன அவர்களும் பிரதமரின் வதிவிட வீடான றோஸ்மிட் பிளேசிற்குச் சென்று ஒப்பந்தத்தைக் கைவிடும் படி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பண்டாரநாயக்கா கைவிடுவதாக வாக்குறுதி அளித்தார். அதைத் தாங்கள் நம்ப மறுப்பதாகவும், தங்கள் முன்னாலேயே ஒப்பந்தத்தைக் கிழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். வேறு வழியின்றி பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் பண்டா செல்வா ஒப்பந்தத்தைக் கிழிக்க வேண்டி ஏற்பபட்டது.

தொடர்ந்து தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் நாட்டிலே முடுக்கிவிடப்பட்டன. 1958 ஜுன் 03ம் நாளன்று தமிழரசுக் கட்சி தடைசெய்யப்பட்டது. 1958 ஜுன் 04ல் தந்தை செல்வா உள்ளிட்ட தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இருப்பினும் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பண்டாரநாயக்கா முயற்சி எடுத்தார். இச்சட்டமூலம் 1958 ஓகஸ்ட் 05ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டது. குறித்த நாளன்ற விடயம் விவாதத்திற்காக எடுக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டு சட்டமூலத்தை விவாதிப்பது முறையல்ல என இடதுசாரிக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பண்டாரநாயக்கா அவர்கள் தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்களை விவாதத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். விவாத்திற்காக மட்டும் பாராளுமன்றத்துக்கு வருவதை தமிழரசுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கையில், 1958 செப்டெம்பர் 26ம் நாளன்று பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் புத்தரஹித்த தேரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச் செயற்பாடுகளால் தமிழ் மொழி அரச கரும மொழி என்ற அந்தஸ்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. கால ஓட்டத்தில் 1965ல் நிலைமைகள் சற்று மாற்றமடைந்தன தமிழரசுக் கட்சியின் உதவியோடு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறியது. இதன் காரணமாக 1965 மார்ச் 24ல் டட்லி செல்வா ஒப்பந்தம் உருவானது. இதன் விளைவாக தமிழ் மொழி விசேட விதிகள் சட்டத்தின் பிரிவு 06(1)ல் குறிப்பிடப்பட்ட ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இவ்வேளையில், 1965 மே 01ல் இடம்பெற்ற மேதினப் பேரணியில் டட்லி செல்வா ஒப்பந்தத்தை எதிர்க்கும் முகமாக டட்லி வடே, தோச வடே (டட்லியின் வயிற்றில் தோசையும் வடையும்) என்ற கோசம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் போகம்பரை மைதானத்தில் டட்லி செல்வா ஒப்பந்தத்திற்கு எதிரான கூட்டமொன்றை நடாத்தினார். 1966 ஜுன் 13ல் ஹக்மன சந்தியில் கூடிய இடது சாரிக் கட்சியினர் டட்லி செல்வா ஒப்பந்தம் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் என்பதனால் அவ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்று கோசம் எழுப்பினார்கள்.

எனினும், தமிழ்மொழி விசேட விதிகள் சட்டத்துக்கான ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒழுங்குவிதிகள் பண்டா செல்வா ஒப்பந்தத்தை விட அதிகமான உரிமைகளை தமிழ் மொழிக்கு வழங்குகின்றது என்ற விடயத்தை முன்வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சியினர் பேரணி நடாத்தினர். பேரணியைக் கலைக்க காவற்துறை எடுத்த முயற்சியின் போது தவறுதலான துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரத்தினசார தேரர் கொல்லப்பட்டார்.

இதன் காரணமாகப் பிரதமர் டட்லியின் பிடிவாதம் தளர்வடையத் தொடங்கியது. இவ்வேளை அரசு கல்வி வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதிலே டட்லி செல்வா ஒப்பந்தத்திற்கு மாறாக கல்வி மொழியாக பெற்றோர் தெரிவு செய்கின்ற மொழி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து தமிழ்ப் பிரதேசங்களுக்கு சிங்களம் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் அனுப்பப்பட்டார்கள். மேலும், கோணேசர் கோயிலை புனித நகராக ஆக்குவது தொடர்பிலும் டட்லி அரசாங்கம் முரண்பாடுகளைக் காட்டியது. எனவே தமிழரசுக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியது.

தமிழ் நீதிமன்ற மொழியாகவும், நிருவாக மொழியாகவும் வடக்கு கிழக்கில் அமைகின்ற ஏற்பாடுகள் வெறும் சுற்றுநிருபங்கள் மூலமே நடைமுறையில் இருந்தது. தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 1972ம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பிலும் தமிழ் மொழிக்கு அரச கரும மொழி அந்த்து வழங்கப்படவில்லை. 1978ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 02ம் குடியரசு அரசியலமைப்பிலும் இதே நிலைமையே காணப்பட்டது. இருப்பினும், 1987ல் இடம்பெற்ற இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்த 13வது திருத்தச் சட்டத்திலேயே தமிழ் மொழி அரச கரும மொழி அந்தஸ்தைப் பெற்றது.

இலங்கையின் சுதந்திரத்திற்காக சிங்களத் தலைவர்களும், தமிழ்த் தலைவர்களும் உழைத்தார்கள். தமிழ்த் தலைவர்களுக்கு தமைலமை தாங்கும் அந்தஸ்து கூட வழங்கப்பட்டிருந்தது. சுதந்திரத்தின் பின்னர் தமிழ்த் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். தமிழ் மொழியும் புறக்கணிக்கப்பட்டது. மிக நீண்ட போராட்டத்தின் பின்பே தமிழ் மொழி அரச கரும மொழி அந்தஸ்தைப் பெற்றது. இந்த அந்தஸ்தைக் கூட சரியான முறையிலே பிரயோகிப்பதில் தடைகள் இருக்கின்றன. இருப்பினும் தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியைப் பயன்படுத்தக் கூடிய எல்லா இடங்களிலும் பயன்படுத்துவதை எங்கள் தார்மீகக் கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் படிவங்களைக் கேட்டுப் பெற்று நிரப்புதல், காசோலைகளைத் தமிழிலே எழுதுதல் கடிதங்களைத் தமிழிலே எழுதுதல், பிள்ளைகளுக்குத் தமிழ் மொழிப் பற்றுதலை ஏற்படுத்துதல் என்பன தமிழர்களதாகிய நாம் எம் தமிழ் மொழியின் பால் வைத்திருக்கும் பற்றுதலை வெளிக்காட்டும் செயற்பாடுகளாகும்.

விழி போல எண்ணி நம் மொழி காத்திட ஒவ்வொருவரும் கடமையுணர்வோடு செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்