இந்திய- இலங்கை இராணுவ அதிகாரிகளின் உயர்மட்டப் பேச்சுக்கள் ஆரம்பம்

இந்திய- இலங்கை இராணுவ அதிகாரிகளின் உயர்மட்டப் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழுவொன்று கொழும்புக்கு விஜயம் செய்துள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார், கேணல் நிஷிட் ரஞ்சன், லெப்.கேணல் ஸ்ரீநாத் சடிப்பா ரெட்டி ஆகியோரும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரவி மிஸ்ரா ஆகியோருமே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, இலங்கை இராணுவத்தின் இளம் அதிகாரிகளுக்காக இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி பயனுள்ளதாக இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, மூத்த அதிகாரிகளுக்கான புலனாய்வு, சிறிய ஆயுதங்களைக்கொண்ட பொறிமுறைகள் போன்ற பயிற்சிநெறிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் அவர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, இலங்கை இராணுவத் தலைமையகத்தில் இரண்டு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலும் நேற்று ஆரம்பமாகியிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இராணுவத்தின் பொது அதிகாரிகள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிசங்க ரணவானவும், இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் சுசீந்திர குமாரும் இணைத்தலைமை தாங்கினர்.

இந்தப் பேச்சுக்களில் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்