பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அபிவிருத்திக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. மேலும் புதிய அபிவிருத்திக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலப்பிரிவுகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுகளில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலப்பிரிவுகளுக்குள் இருந்து வெளியிடங்களுக்கு மாடுகள் உட்பட சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதாகவும் அவை தடுத்து நிறுத்த மண்முனைப்பாலத்தில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்படுவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையினால் வேறு இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு இப்பகுதியில் வியாபாரம் செய்வதற்கு தற்காலிக தடை பிரதேசசபை விதித்தமையானது அவர்களின் பாதுகாப்பு கருதியும் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதியும் எடுத்ததாகவும் ஆனால் சிலர் அதனை வேறு விதமாக கூறி பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபை தவிசாளர் என்.புஸ்பலிங்கம் சுட்டிக்காட்டினார்.

இங்கு வரும் வியாபாரிகளின் பாதுகாப்பினை பொலிஸார் முழுமையாக உத்தரவாதப்படுத்தினால் அதற்கு நாங்கள் அனுமதி வழங்கமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் தமிழ் மக்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்கின்ற நிலையில் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வரும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அது இந்த மாவட்டத்தில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் ஏனையவர்களை அழைத்து கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கமுடியும் என இணைத்தவைவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உட்பட மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர், உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்