சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகளென்றால் முஸ்லிம்கள் துரோகிகள் – விமல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வரும் நிலையில், சஹரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்தோடு முஸ்லிம்களை சிங்களவர்கள் பெரிதும் நம்பியிருந்தனரென்றும் ஆனால் அது இன்று தலைகீழாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டில் பயங்கரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியதுபோல் முஸ்லிம்கள் அனைவரினதும் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், சஹரான் குழுவினரின் தாக்குதல்களுடன் தொடர்புபட்டனர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் உடன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை தூக்குத்தண்டனையாக இருக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்