நஃப்டா உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா விரையும் பிரதமர் ட்ரூடோ!

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்லது நஃப்டா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்காக பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அமெரிக்க செல்லவுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை வோஷிங்டன் செல்லவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது புதிய வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை சீரமைப்பது குறித்தும், மேலும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான, இன்னமும் முடித்து வைக்கப்படாதுள்ள ஏனைய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இருநாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரூடோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவில் கடந்த ஆறு மாத காலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் விவகாரம் தொடர்பிலும் இரு தலைவர்களும் ஆராய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையிலான இந்த உடன்படிக்கையில் திருத்தங்களை செய்து துரித கதியில் கைச்சாத்திட வேண்டுமென அமெரிக்காவின் துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ்; வலியுறுத்தியிருந்ததன் பின்னணியில், பிரதமர் ட்ரூடோவின் இந்த விஜயம் அமையவுள்ளது.

குறித்த உடன்படிக்கைக்கு பதிலீடாக கடந்த ஆண்டு இறுதியில் மூன்று நாடுகளும் செய்து கொண்ட புதிய உடன்படிக்கையில் இதுவரையில் திருத்தங்கள் செய்யப்படவில்லை.

உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி இதுவரையில் தளர்த்தப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் நப்டா உடன்படிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.

எனினும், முதலில் வரி விதிப்பு நீக்கப்படும் வரையில் உடன்படிக்கையில் திருத்தங்களை செய்வதற்கு கனடா அவசரம் காண்பிக்காது என வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்