சபாநாயகரை உடன் சந்திக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானம்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலிற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தேசிய புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிர்பார்த்துள்ளது.

அவரை அழைப்பது தொடர்பாக நாளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளின்போது தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸ் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், புலனாய்வு தகவல்கள் வெளியாவதனால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டிவந்தனர்.

இதனை அடுத்து ஜனாதிபதியும் அவசர அமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து புலனாய்வு அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்றும் அவ்வாறு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டால் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு அரச அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்