இனவாதக் கருத்துக்களை முன்வைத்து எமது நாட்டையும் மக்களையும் குழப்ப முயற்சிக்கவேண்டாம் – முன்னாள் எம்.பி

எமது நாட்டிலுள்ள சிறு பான்மைக் கட்சிகள்தான் மிக அதிகமான இனவாதக் கருத்துக்களை முன்வைத்து எமது நாட்டையும் மக்களையும் குழப்பிவிட்டு அதில் குளிர்காய்ந்துகொண்டு, தங்களின் அரசியல் சுய இலாபத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
“சிறந்த தலைமைத்துவத்தையும், எமது நாட்டையும் பாதுகாக்க மக்கள் ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பெருளில் நேற்று (17) ஊடகவியலாளர் சந்திப்பு அவரின் அக்கரைப்பற்று காரியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ அரசு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பையும், மக்களின் இருப்பையும், பல பில்லியன் கணக்கிலான பல அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்து வந்ததுடன், 30 வருட காலமாக இருந்துவந்த, அந்த பயங்கரமான கொடிய யுத்தத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது மாத்திரமல்லாமல், மக்கள் எல்லோரும் ஒரு சுதந்திரமாக வாழக்கூடிய வகையில்
ஒரு சுதந்திரக் காற்றை சுவசிக்க வைத்த அந்த தலைமைத்துவத்தை, அன்று மக்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. ஆனால் இன்று மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமைத்துவத்தை நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள்.
மைத்ரி ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாரிய அநீதிகளும், அநியாயங்களும், உயிர், பொருள், உடமை என பல்வேறுபட்ட பல இழப்புக்களை இழந்து சிக்கித் தவிக்கின்றவர்களாக எமது மக்கள் காணப்படுகின்றனர். மஹிந்த அரசை அன்று ஒதுக்கிய மக்கள், இன்று மஹிந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடி துடித்துக் கொண்டிரிக்கின்றார்கள்.
எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ் நிலையை வைத்துக்கொண்டு சில அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டு இனவாத கருத்துக்களை விதைத்து வருகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. சிறு பான்மை மக்களாகிய நாம் மிகத் தெளிவாக இருந்துகொள்ளவேண்டும். இது அவர்களின் அரசியல் நாடகம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
எமது நாட்டை ஆளக்கூடிய சிறந்த தலைவரும், இன மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சரி சமமாக வைத்துக்கொண்டு ஆட்சி செய்த அந்த தலைமைத்துவத்தை நாம் கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வருவதன் மூலம் எமது நாட்டில் ஒரு நின்மதியான அமைதியான வாழ்வை நாமும், எமது பிள்ளைகளும், எதிர்கால சந்ததியினரும் அடைய முடியும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்