ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தவறு – ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிப்பதானது, 19ஆவது அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முயற்சிகள் நடக்கின்றன. இது அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணான ஒரு செயற்பாடாகும்.

19ஆவது திருத்தத்திற்கு இணங்க, நாடாளுமன்றின் முதல் அமர்வு இடம்பெற்ற நாளில் இருந்து நான்கரை வருடங்களுக்கு அதனை கலைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

இது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அதில், 70 வீதமானோர் நாடாளுமன்றைக் கலைக்குமாறு கூறியிருந்தாலும் நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 9ஆம் திகதிக்குமிடையில் நடத்தியே ஆக வேண்டும். இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலை எப்படி நடத்துவது?” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்