அம்பாறை விவகாரம் : முஸ்லிம் உறுப்பினர்களும் இஸ்லாமிய பயங்கரவாதமும் காரணம் – வியாழேந்திரன் ஆவேசம்

அம்பாறை – கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு முஸ்லிம் உறுப்பினர்களும் இஸ்லாமிய பயங்கரவாதமும் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் காரணமாகத்தான் 30 வருடங்கள் தாண்டியும் இன்னமும் குறித்த உப பிரதேசசபை தரமுயர்த்தப்படாமல் இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “1993 ஆம் ஆண்டு இந்த நாட்டில் 29 பிரதேச செயலகங்கள் உப பிரதேச செயலங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன. இதில் 28 தரமுயர்த்தப்பட்டுவிட்டன. ஆனால் 30 வருடங்கள் தாண்டியும் இந்த பிரதேச சபை ஏன் தரமுயர்த்தப்படாமல் இருக்கிறது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் இருப்பதற்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளே காரணம். இதன் பின்னணியில் அரசியல் மட்டுமன்றி இஸ்லாமிய பயங்கரவாதமும் இருக்கின்றது.

97 சதவிகிதம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கால இழுத்தடிப்பு செய்யும் அவலநிலை தொடர்கின்றது. இதற்கு தமிழ் தலைமைகளும் காரணம். அவர்களும் இந்த அரசாங்கமும் இணைந்து அம்பாறை தமிழ் மக்களை எமாற்றுகின்றனர்.

இவ்வாறே கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் ஆதரவினை வைத்துக்கொண்டு தமக்கு சாதகமான விடயங்களை செய்துள்ளார்கள். ஆனால் இந்த பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் இருக்கின்றது. தமிழர்கள் என்ற பாரபட்சமே இதற்கு காரணம்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்