மீண்டும் அமைச்சர்களாகிய கபீர் ஹாசீம், அப்துல் ஹலீம்

கபீர் ஹாசீம், அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக இன்று (19) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கபீர் ஹாசீம் – நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும், அப்துல் ஹலீம் – தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சராகவும் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

முன்னதாக இந்த இருவரும் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது குறித்து பிரதமர் ரணில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பொய்ப் பிரசாரங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து கூட்டாக விலகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் இருவர் அமைச்சுப் பொறுப்புக்களை மீள ஏற்பது உசிதமானது அல்லவென ஹக்கீம் இதன்போது ரணிலிடம் தெரிவித்திருந்தார்.

இதனால் முஸ்லிம் மக்கள் அரசின் மீது வெறுப்படையும் நிலை ஏற்படலாம் என்பதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கூட்டு ஒற்றுமையை அது பாதிக்கும் எனவும் ரணிலிடம் ஹக்கீம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்