கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்

தற்போது நாட்டில் பேசுபொருளாக மாறியிருக்கின்ற கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு உள்ளிட்டவர்கள் மூன்றாவது நாளாகவும் இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் யாழ் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியல் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது கிடைத்த தகவல்களின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிறிநேசன் ஆகியோர் பிரதமரை சந்தித்துள்ளதாக அறியமுடிகின்றது.

மேலும், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் அவர் மீள அங்கிருந்து திரும்பியவுடன் இது தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய இணைப்பு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான வாக்குறுதிகள் பலமுறை ரணிலால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாவை சேனாதிராசா மற்றும் ஞா.சிறிநேசன் ஆகிய இருவரிடமும் ரணில் இந்த வாக்குறுதியை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடந்த சந்திப்பின்போதே, குறித்த வாக்குறுதியை பிரதமர் ரணில் வழங்கினார்.

வரும் செவ்வாய்க்கிழமையோ, அல்லது அதற்கடுத்து வரும் செவ்வாய்க்கிழமையோ அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க பிரதமர் தயாரானபோது, முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்த்தது.

இந்நிலையில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லாத நிலையில், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்