போராட்டத்தை திசைதிருப்ப வேண்டாம்: இது இனத்திற்கு எதிரானது அல்ல- கல்முனை சங்கரத்ன தேரர்

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தினை நடாத்திவருவதாக தெரிவித்த அவர் தமது போராட்டத்தினை யாரும் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து நேற்று (புதன்கிழமை) அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் மேற்கொண்டுவரும் போராட்டமானது தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நன்மை கருதியே முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையர் என்ற அடிப்படையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்கள் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்.

30 வருடங்களுக்கு மேலாக கல்முனை மக்கள் பல்வேறு போராட்டங்களையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ளபோதிலும் அவை புறந்தள்ளப்பட்டே வந்துள்ளன

எனவே இந்த போராட்டத்தை திசை திருப்ப யாரும் முயற்சிக்க வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் மூன்றாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருமளவான மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களும் இளைஞர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்