ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு கருதி பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு சுமார் 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல்களைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்தவும், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களை விடுவிக்கவும் ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட பல தமிழ் அரசியல் கைதுகள் இன்னும் சிறைகளில் வாடிவருகின்ற நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு சிறைகளில் இருக்கின்ற அரசியல் கைதிகளில் பலர் 15 வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் வாடிவருகின்றனர்.

எனினும், அவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆக்கபூர்பவமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்கின்ற அதிருப்தி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்