கோட்டாவிடம் நிதி பெற்றுக்கொண்டது தொடர்பாக அப்துல் ராசிக் தகவல்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து எவ்வித நிதியையும் பெற்றுக்கொள்ளவில்லை என இலங்கை தௌபீக் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2013 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பாரதூரமான பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சில அமைப்புகள் சுமத்தின.

அதற்கு எதிராக நான் போதனை ஒன்றை நடத்தும்போது பௌத்த மதத்திற்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்துவிட்டேன். எனினும் அதன் பின்னர் அந்த தவறை உணர்ந்து நான் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டேன். அந்தத் தவறை நான் ஏற்றுக்கொண்டேன்.

நான் ஒருபோதும் முன்னாள் அரசாங்கத்திடமிருந்தோ, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்தோ புலனாய்வு அமைப்புகளிடமிருந்தோ எவ்வித நிதியையும் பெறவில்லை.” என கூறினார்.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாரா என்படும் புலஸ்தினி மகேந்திரனை இலங்கை தௌபீக் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் என்பவரே மதம் மாற்றி திருமணம் செய்து வைத்ததாக, புலஸ்தினியின் தாயார் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்