கல்முனை தமிழ் மக்களுக்காக பதவித்துறக்க தயார் -அங்கஜன் ராமநாதன்

கல்முனைத் தமிழ் மக்களுக்காக  தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான  அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்,

மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே மக்களால் பதவிகள் வழங்கப்படுவதாகவும் பிரச்சினை  வரும்  போது  வீர வசனம்  பேசி விட்டு அதன் சொகுசுக்களை அனுபவிப்பதற்காக பதவிகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரும் மக்களுக்கு ஆதரவாக தம்முடன்  இணைந்து  ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளைத் துறக்கத் தயாராக உள்ளார்களா? எனவும் அங்கஜன் ராமநாதன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்திவப்படுத்தும்  அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  தமது  பதவிகளைத் துறப்பதனூடாக, கல்முனை  வடக்கிற்கான பிரதேச செயலகம் குறித்த கல்முனைத் தமிழ்  மக்களின் நீண்ட நாள் கனவினை ,  நனவாக்க முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலுக்கு வடக்கு கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருந்தால் அவர்களுடன் இணைந்து தமது பதவி விலகற் கடிதத்தினையும் கையளிக்க  தாம் முன்னிற்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்