ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மீண்டும் இலங்கைக்கு அச்சுறுத்தல்: இந்தியா

இலங்கை மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை ஐ.எஸ்.அமைப்பு நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய உளவுப்பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் குறித்து மூன்று எச்சரிக்கை கடிதங்களை இந்திய உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளுக்கு றோ அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் றோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி இஸ்லாமிய தேசத்தை பிரகடனப்படுத்தி செயற்பட்டுவந்த ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பிரதேசங்கள் தற்போது அவர்களிடம் இல்லை. ஆகையால், இந்து சமுத்திர நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளன.

கேளராவிலில் சுமார் 100 பேர்வரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் குறுகிய காலப்பகுதிக்குள் இணைந்துள்ளதுடன், 30க்கும் அதிகமானோர் வெவ்வேறு அமைப்புக்களுடன் கேரளா பகுதியில் தொடர்பு வைத்துள்ளனர்” என றோ அக்கடிதத்தில் கூறியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடிதத்தை கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கே றோ உளவுத்துறை அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் இந்தியாவின் கடல் எல்லைப் பகுதிகள் மற்றும் ஏனைய முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பயங்கரவாதம் குறித்து இலங்கைக்கும் றோ அமைப்பு எந்ததொரு எச்சரிக்கையும் விடுக்கவில்லையென இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சுற்றிவளைப்புக்கள், சோதனைகள், கைதுகள் உள்ளிட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்