கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரம் உயர்த்த தமிழ்தேசியகூட்டமைப்பு தடைகளை உடைத்து விடைகளை பெறும்!

அடுத்துவரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அதாவது எதிர்வரும் 25ஆம் திகதி தவறினால் ஜூலை 2ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமது தலைமையிடம் வாக்குறுதி அளித்துள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இடம்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் காரைதீவில் இடம்பெற்று வரும் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஆகியோர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கல்முனை விவகாரத்தை பேசியுள்ளனர்.
அங்கு அவர் மேற்படி இரு திகதிகளில் ஒன்றில் இத்தரமுயர்த்தல் விடயத்தை மேற்கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார்.

எந்தத் திகதியில் இதனைச்செய்யலாம் என்றுகூடத் தெரியாத பிரதமரின் கூற்றை நம்புவதா? நம்பாமல் விடுவதா? என்பதற்கு அப்பால் அமைச்சரவையின் ஊடாகத்ததான் அது சாத்தியம் என்பதை நாமனைவரும் அறிவோம்.

நேற்று பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது எமது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதே கேள்வியை அவரிடம் கேட்டதற்கு குறித்த பிரதேச செயலகத்திற்கான எல்லை நிர்ணயம் இன்னும் பூரணமாக செய்து முடிக்கப்படவில்லைஎனவே இரு சமூகங்களும் முரண்படாத வகையில் இணக்கப்பாட்டுடன் அதனைச் செய்து பின்னர் தரமுயர்த்தலைச் செய்யலாம் என்று பதிலளித்துள்ளார்.

மொத்தத்தில் பிரதமரின் பதிலும் அமைச்சரின் பதிலும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஒரு பக்கம் முஸ்லிம்களைப் பகைத்துக் கொள்ளாமலும் மறுபக்கம் தமிழ் மக்களை அரவணைத்துக்கொண்டு அரசியல் செய்ய முற்படுவதைக் காணலாம்.

இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தில் யாராவது உயிரைத் துறக்க நேரிட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். எமக்கான தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்.

த.தே.கூட்டமைப்பும் சரி அதற்கும் முன்பு த.வி.கூட்டணியும் சரி நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகளாகவே இருந்துவந்துள்ளன. ஆனால் 2015ற்குப் பிற்பாடு அரசியல் ரீதியாக ஒருவகையிலான நல்லிணக்க அரசியலை த.தே.கூட்டமைப்பு செய்துவருகிறது.

அன்று தொட்டு இன்றுவரை கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றோம்.
பல தடவைகள் பிரதம மந்திரியைச் சந்தித்துப் பேசியுள்ளோம். வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

ஹரீஸ் என்கிற முஸ்லிம் அரசியல்வாதியால் இவ்விவகாரம் இழுத்தடிக்கப்பட்டு வருவதனை நாடாளுமன்றில் 11 வருடங்கள் எம்.பி.யாக இருந்தவன் என்ற வகையில் நான் நன்கு அறிவேன்.

இதனிடையே எமது நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நாடாளுமன்றில் பேசுகையில் இத்தரமுயர்த்தலைச் செய்யாவிடின் அரசுக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது எமது நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், சுமந்திரன் எம்.பி சகிதம் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்திகொண்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். எதற்கும் நல்லமுடிவை எதிர்பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்