இழுத்தடிப்பு, ஏமாற்றம் இன்றி உருவாக்கவேண்டும் கல்முனை பிரதேச செயலகம்! – சிறீநேசன் காட்டம்

இழுத்தடிப்புகள், ஏமாற்றங்கள் இல்லாத வகையில் துரிதமாக கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டமாக வலியுறுத்தியது. இது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரினால் ஆரம்ப கட்ட வெளிப்படுத்தல்களை அறிவிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நேற்றையதினம் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்நாட்டு அலுவல்கள், உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகம் தொடர்பில் மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பில் தமிழ் சி.என்.என். இணையத்துக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை முழுமையான அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக ஆக்குதல் தொடர்பாக முக்கியமான கருத்தாடலை பிரதமர், உள்நாட்லுவல்கள் அமைச்சர் ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் மேற்கொண்டது. இக்கருத்தாடலின் போது தலைவர் இரா.சம்பந்தன் தனது உறுதியான நிலைப்பாட்டினை அக்கறையுடன் வெளியிட்டார். இழுத்தடிப்புகள், ஏமாற்றங்கள் இல்லாத வகையில் துரிதமாக இப்பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகள் இனியும் இடம்பெறக் கூடாது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்.

30 ஆண்டுகளாக இந்த விடயம் இழுபட்டுக் கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவுள்ளது என்பதை பிரதமரிடமும் உள்ளுராட்சி அமைச்சரிடமும் கடுந்தொனியில் வலியுறுத்திக் கூறினார். நிதி அதிகாரம், நிலப் பரிபாலன அதிகாரம் இரண்டும் வழங்கப்பட்டாக வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக விரைவில் அபிவிருத்தியைக் கொண்டு செல்வதற்கு இப்படியான செயலகம் மிக மிக அவசியமானது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது தொடர்பில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. அத்துடன் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்கள் உருப்படியானதும், உறுதிமிக்கதுமான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பற்றிய கருத்து வெளிப்பாட்டினை வெளியிட்டாக வேண்டும் என்ற விடயத்திலும் கருத்தாடலில் இணக்கம் காணப்பட்டது. கடந்த கால கருத்துப் பரிவர்த்தனைகள் போன்றல்லாமல் இன்றைய கருத்தாடல் நம்பிக்கையூட்டத்தக்க விதத்தில் அமைந்திருந்தது.

மேலும் இதன் போது மட்டக்களப்பிலுள்ள ஒரு சில பிரதேச செயலகங்களில் உள்ள ஒரு சில உயர் நிருவாகிகளால் மேற்கொள்ளப்படுகின்ற முறைகேடான செயற்பாடுகள், அதிகார, நிதி துஸ்பிரயோகங்கள், அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பாகவும், அவர்களால் அலுவலர்களுக்கும், மக்களுக்கும் ஏற்படும் அவஸ்தைகள், மனஅழுத்தங்கள் தொடர்பாகவும் பிரதமர் மற்றும் உள்நாட்லுவல்கள் அமைச்சரிடமும் என்னால் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய உச்சமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூறப்பட்டது. இதனை பிரதமர் மற்றும் அமைச்சர் உட்பட அவர்களின் செயலாளர்கள் அக்கறையுடன் செவிசாய்த்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் என்றும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்