தற்கொலைதாரியான சாரா என்ற புலஸ்தினி குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் அப்துல் ராசிக்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானை நேரில் சந்தித்ததில்லை என சிலோன் தௌஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சாட்சியம் வழங்கியுள்ள அவர், ‘தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பாக 2016ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு தகவல் வழங்கினேன்.

பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத்தளங்கள் ஊடாக சஹ்ரான் ஹசீம் ஜிஹாட் பயங்கரவாதத்தை பிரசாரப்படுத்தி வந்துள்ளார். இது குறித்த தகவல்களை நான் காணொளி ஆதாரங்களுடன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வழங்கினேன். அதேநேரம் நான் சஹ்ரானை நேரில் சந்தித்ததில்லை.

கட்டுவாபிட்டியவில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஹஸ்துன் எனது அலுவலகத்துக்கு 2013ம் ஆண்டளவில் வந்தார். அதன்போது அவர் மற்றுமொரு தற்கொலைதாரியான சாரா என்ற புலஸ்தினியை அழைத்துவந்தார்.

அப்போது தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஹஸ்துன் கோரிய போதும், அதனை நான் மறுத்ததுடன், இந்த விடயத்தை மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு பாரப்படுத்தினேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்