கல்முனை உப பிரதேச செயலகத்தை தர முயர்த்துவதில் என்ன சிக்கல்?- சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

பிரதேச சபையை ஒரே இரவில் மாநகரசபையாக தரம் உயர்த்த முடியுமென்றால், 35 வருடகாலமாக கோரி வருகின்ற பிரதேச செயலகத்தை உடனடியாக தரம் உயர்த்துவதில் என்ன சிக்கல் இருக்கின்றதென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். பருத்திதுறை வீதியின் கட்டப்பிராய் சந்தியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கல்முனையிலுள்ள உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்துமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 35 வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற இக்கோரிக்கைள் முஸ்லீம் தலைமைகள் அல்லது முஸ்லீம் மக்களின் எதிர்ப்புக்களால் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இவ்வாறு முஸ்லீம் தரப்புக்களின் அழுத்தம் காரணமாக, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாரிய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தும் அபகரித்தும் முஸ்லீம் குடியேற்றங்கள் அல்லது கிராமங்களை உருவாக்குவதற்காகவே முஸ்லீம் தரப்புக்கள் இதற்குத் தடையாக இருக்கின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், 21 தமிழ்க் கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாறியிருக்கின்றன.

இவ்வாறு கிராமங்களை மாற்றியும் காணிகளை ஆக்கிரமித்தும், மதத் தலங்களை அகற்றியும்  பள்ளிவாசல்களைக் கட்டியிருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஆளுநரான ஹிஸ்புல்லா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.

இதனால் தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய இந்தப் பிரதேசத்திலுள்ள உப அலுவலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்த விடாமல் முஸ்லீம்கள் தடுக்கின்றனர்.

ஆனால் முஸ்லிம் மக்களுக்காக புதிய கிரமங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்காக அவை எதனையும் செய்ய முடியாது என்று அவர்கள் தடுக்கின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டி அல்லது கண்டித்துப் பேசினால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.

ஆகவே முஸ்லீம் தலைமைகள் ஒரு இரவில் செய்ய முடியுமென்றால் 35 வருடமாக தமிழ் மக்கள் கோரி வருகின்றதை ஏன் செய்ய  முடியாது.  இவ்விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு  பிரதமர் கால அவகாசம்  கோரியதாக கூட்டமைப்பினர் தற்பொது கூறுகின்றனர்.

ஆகவே இதற்கு காலம் தேவையில்லை. அரசாங்கம் நினைத்தால் செய்ய முடியும். எனவே உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்