கல்முனை மக்களுக்காக பதவியை தூக்கியெறியத் தயார்!- அங்கஜன் ராமநாதன்

தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பதவியை தூக்கியெறியவும் தயாரென யாழ்.நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அங்கஜன் ராமநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே தங்களுக்கு பதவிகள் வழங்கப்படுகின்றதே ஒழிய சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதற்கு அல்ல.

அந்தவகையில் கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு எந்நேரமும் தயாராகவே உள்ளேன்.

ஆனால், தனியொருவருடைய இராஜினாமா எந்தவொரு பாரிய தாக்கத்தையும்  ஏற்படுத்த போவதில்லை என்பதே வரலாறு.

ஆகவேதான் வடக்கு- கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதற்கு முன்வர வேண்டும்.

அப்போதுதான் கல்முனை மக்களின் நீண்ட நாள் கனவான கல்முனை வடக்கு  பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் செயற்பாடு நனவாக மாறும்.

ஆகவே தமிழர்களின் ஒருமித்த பலத்தினை முழு தேசத்திற்கும் எடுத்துக் காட்டி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயகப்போரின் முதல் அத்தியாத்தை எழுதுவதற்கு அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்” என அங்கஜன் ராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்