ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்: செல்வம் அடைக்கலநாதன்

பாராளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவுத்துள்ளார்.

ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்வி ஓன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார். பாராளுமன்றம் முடக்கப்பட்டாலும் கூட பாராளுமன்ற தெரிவுக் குழுவை கலைக்க முடியாது. பாராளுமன்றம் தான் மக்களின் சக்தியாக இருக்கின்ற சட்டங்களை இயற்றுகின்ற, நீதித்துறைக்கு வலுச் சேர்க்கின்ற அமைப்பாக இருந்து கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் இந்த தெரிவுக் குழுவை கலைப்பதற்கு ஜனாதிபதியாலும் முடியாது. தன்னைப் பற்றிய செய்திகள் வெளியில் வரக் கூடாது என ஜனாதிபதி கருதுவதாக தெரிகிறது. தெரிவுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தை முடக்கியுள்ளார். சட்ட ரீதியாக கூட தெரிவுக் குழுவை நிறுத்த முடியாது. ஆகவே ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய அதிகாரம் என்ன என்பதை புரியாது செயற்படுகின்றார் என்பது எனது கருத்து.

இதனை நியாயமாக பார்க்க வேண்டும். யார் பிழை செய்தாலும் பிழை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பவர் ஜனாதிபதி. பாதுகாப்புக் குழுக் கூட்டம் கூட்டப்படுகின்ற போது பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபரை அழைக்கக் கூடாது என அவர் சொல்லியிருப்பதாக சாட்சியமளித்தவர்கள் கூறியுள்ளார்கள்.

பாதுகாப்பு சம்மந்தமான முழுப் பொறுப்பும் ஜனாதிபதி தான் எடுக்க வேண்டும். ஏன்எனில் பாதுகாப்பு அமைச்சராக அவர் தான் இருந்து கொண்டு இருக்கின்றார். உலக நாடுகளின் புலனாய்வுத் துறை ஒருவாரம், இரண்டு வாரங்களுக்கு முன்னரே தாக்குதல் தொடர்பில் கூறியுள்ளார்கள். இதன்பின் கூட அலட்சியப் போக்கு காணப்பட்டுள்ளது. ஜனாதிபதியை குறை கூறும் போது கட்சித் தலைவர் என்ற வகையில் சுதந்திரக் கட்சி அதனை எதிர்க்கும்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜனாதிபதி  சரியயோ, பிழையோ அதனை ஏற்க வேண்டும். நியாயமாக கருத்துக்கள் வருகின்ற போது அதனை ஏற்க வேண்டும். பாதுகாப்புக்கும், நடந்த சம்பவத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டியவர் ஜனாதிபதியே. சாட்சியங்கள் சரியா, பிழையா என்பது சாட்சியமளிப்பு முடிவிலேயே தெரியும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்