தொலைபேசி நிறுவனத்தின் பெயரில் உடுவிலில் விபச்சார விடுதி!

மொபைல் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயரில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீடொன்றில் விபச்சார விடுதி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தீவிர விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக டயலொக் என்ற நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகமொன்று இயங்கிவந்துள்ளது.

குறித்த அலுவலகத்தில் நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர். மேலும்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டதுடன்  தனது பிரிவில் இயங்குவதாயின் பதிவு செய்வது கட்டாயமெனவும்  கிராம அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தம்மை டயலொக் நிறுவனத்தின் அலுவலகர்கள் எனக் குறிப்பிட்ட சந்தேகநபர்கள், பொலிஸாருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றும் கிராம அலுவலகருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் இவ்விடயம் உடுவில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலகர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை உடுவில் அம்பலவாணர் வீதியில் பயணித்த இளம் பெண் ஒருவரை 2 பெண்கள் மற்றும்  2 ஆண்கள் இணைந்து வழிமறித்துக் கடத்த முற்பட்டுள்ளனர்.

ஆனாலும் அவர்களிடமிருந்து தப்பித்த அந்த இளம் பெண், சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிஸாரின் வருகையை அறிந்ததும் சந்தேகநபர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை  வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலாளர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கூடியதுடன் விபச்சார விடுதி தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்றும் அவர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்