அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது – செல்வம் எம்.பி.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் பொறுமற்றது என்று ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு அவர் கூறினால் 19 ஆம் திருத்தத்தினால் என்ன பாதகம் ஏற்பட்டுள்ளது என்பதையும் ஆதரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதனை விடுத்து அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 18 , 19 ஆம் திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேவைக்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவர் கூறுவதைப் போன்று அவரது தேவைக்கேற்ப அரசியலமைப்பு திருத்தை மாற்ற முடியாது. காரணம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, சட்டமாக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கவேண்டும் என்று ஜனாதிபதி கூறுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதியின் இந்த கருத்தினால் நாட்டின் ஸ்திரத்தன்மையும், கௌரவமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் தனக்கான கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதற்கு இணங்க செயற்பட்டார். ஆனால் இப்போது பதவி ஆசையினால் அதிலிருந்து விலகி இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

தனக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று அவர் கூறுவதை நம்ப முடியாமல் உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக யுத்தியாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். ஆனால் ஜனாபதியினுடைய இது போன்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் நாட்டின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

19 ஆம் திருத்தத்தினால் நாட்டுக்கு எந்த பாதகமும் ஏற்படவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் மஹிந்த ராஜபக்ஷவை இவர் பிரதமராக்கியமையினாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்கு 19 ஆம் திருத்தம் காரணம் அல்ல. அத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதிக்கு காணப்படும் முரண்பாடுகளும் பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்