19ஆவது திருத்தத்தை அகற்றினால் நாட்டில் குடும்ப சர்வாதிகாரமே தழைத்தோங்கும் – ஸ்ரீநேசன்

19ஆவது திருத்தச் சட்டத்தினை அகற்றுவது, குடும்ப ஆதிக்கத்தினையும் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளையும் சாதிப்பதற்கான ஓரு விடயமாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 19ஆவது திருத்தச் சட்டம் ஊடாக மக்கள் அதிகாரங்களை பெறக்கூடிய வகையிலும் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலையிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு நிகழ்வொன்றில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் இருந்த பல சர்வாதிகார நோக்குடனான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஆணைக் குழுக்கள் சுயாதீனமாக இயங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது சுயாதீன முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் ஜனாதிபதி, சுயாதீன ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் முடிவுகளை அனுசரித்து செல்லக்கூடிய வகையிலும் இந்த சட்டமூலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனி மனித சர்வாதிகாரத்தினை அடக்கி ஜனநாயக ரீதியான ஒரு அதிகார பரவலாக்கலை செய்யக்கூடிய ஒரு சட்டமாக 19ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. நாடாளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 26 சதித் திட்டமும்  இந்த சட்டமூலத்தின் ஊடாகவே தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில், 19ஆவது திருத்தச் சட்டம் அகற்றப்படவேண்டும் என ஜனாதிபதி கூறுவாரானால் அவர் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவராக இல்லாமல் தனிமனித சர்வாதிகாரத்தினை கையிலெடுக்க விரும்புகின்றார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

19ஆவது திருத்தச் சட்டத்தினை ஜனாதிபதியே கொண்டுவந்தார். அதன் மூலம் மக்கள் அதிகாரத்தினைப்பெறக்கூடிய வகையிலும் ஊடகங்கள் சுதந்திரத்தினை பேணக்கூடிய வகையிலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்தசூழலில் 19ஆவது திருத்தச் சட்டத்தினை அகற்றக்கூடாது என்பதுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்பட்டு நாடாளுமன்ற, அமைச்சரவை அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்பதே நாட்டிற்கு உகந்ததாக அமையும்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்