மிசோரமிலிருந்து நாடுகடத்தப்பட்ட 135 மியான்மர் அகதிகள்

கடந்த 2017ம் ஆண்டு மியான்மரிலிருந்து மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்திருந்த 135 மியான்மர் அகதிகள் அசாம் ரைப்ல்ஸ் படையினரால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

மியான்மரில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் காரணமாக ரக்ஹைன் மாநிலத்திலிருந்து வெளியேறிய 219 அகதிகள் மிசோரமின் லவன்ங்டலாய்(Lawngtlai) மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களில் வசித்து வந்துள்ளனர். 

“219 அகதிகளில் 84 பேர் விருப்பத்தின் பேரில் மியான்மருக்கு திரும்பினர். மற்ற 135 அகதிகளையும் அசாம் ரைப்ல்ஸ் படையினர் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்,” என லவன்ங்டலாய்(Lawngtlai)  மாவட்ட துணை ஆணையர் ஷஷன்கா அலா தெரிவித்துள்ளார். 

மியான்மருக்கு திரும்ப அகதிகள் தயங்கியதாகவும் அவர்கள் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாகவும் மிசோரம் உள்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

“இந்த அகதிகளை நாடுகடத்துமாறு இந்திய உள்துறை அமைச்சகம் மிசோரம் அரசை கோரியிருந்தது,” என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். 

கடந்த நவம்பர் 2017ல் மியான்மர் ராணுவம் மற்றும் ரக்ஹைனில் உள்ள அரக்கன் ராணுவம் என்ற ஆயுதக்குழுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 1,700 அகதிகள் தெற்கு மிசோரமில் தஞ்சமடைந்திருந்ததாக அவர் கூறுகிறார்.   

மியான்மருடன் நான்கு வட கிழக்கு இந்திய மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம் (520 கி.மீ.), மணிப்பூர் (398 கி.மீ.), நாகலாந்து (215 கி.மீ.), மிசோரம் (510 கி.மீ.) வேலி இல்லாத எல்லையை கொண்டிருக்கிறது. இதில் பெரும் எல்லைப்பகுதிகள் மலையினால் சூழப்பட்டுள்ளது.   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்