ஆளுநர் சுரேனுக்கு வரலாறு தெரியாது! மாவை காட்டம்

வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் செயற்படும் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு வரலாறு தெரியாது. அதனால்தான் அவர் தவறாக அறிக்கைகளை விடுகின்றார். இன்று பத்திரிகைகளில் பார்த்தேன் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக உள்ளது என்று. அது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது அப்படி சொல்லியிருப்பாரானால் அவருக்கு வரலாறு தெரியாது என்றுதான் கூறவேண்டும்.

– இவ்வாறு காட்டத்துடன் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாகத் தரமுயர்த்தும் ஆரம்ப வேலைகள் இன்று அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படுமாகால் அது எமது பகுதியில் உள்ள மக்களுக்கு பாரியளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு அந்த இடத்தில் தொழிற் பேட்டை ஒன்றை அமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக நாம் பிரதமருடன் பேசியுள்ளோம். அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், எவருக்கும் பாதிப்பில்லாத மாதிரி மன்னார் பரப்பக் கடவையில் 330 ஏக்கர் காணியில் சிமெந்துத் தொழிற்சாயை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எம்மால் எடுக்கப்பட்டு வருகின்றன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்