சைக்கிள் – சி.வி கூட்டணி முயற்சி தோல்வி: கூட்டமைப்புக்கான அச்சுறுத்தல் நீங்கியது!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான புதிய கூட்டணி தொடர்பிலான முயற்சிகள் தோல்வியடைந்தமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அச்சுறுத்தலை நீக்கியுள்ளதாக கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர்மட்ட தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமான தரப்புக்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உட்பட கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படுவது தொடர்பான முயற்சிகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்தன.

குறித்த முயற்சிகள் தோல்வியடைந்து இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை அடுத்தே கூட்டமைப்பினரால் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டணி உருவாகியிருக்குமெனில் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தி அடைந்துள்ள வாக்குகளை கவர்ந்திழுக்கும் நிலை காணப்பட்டது.

ஆனால் மாற்றுத்தலைமை எனக் கூறிக்கொள்வோரினால் தங்களுக்குள்ளேயே ஒற்றுமைப்பட முடியாத நிலைமை வாக்காளர்கள் மத்தியில் அவர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தாது

எனவே அடுத்து வரும் தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்ற போதிலும் கூட்டமைப்புக்கான வெற்றி வாய்ப்புக்களில் பெரிதளவில் தாக்கம் ஏற்படாது எனவும் குறித்த  கூட்டமைப்பு தலைவர்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விக்கி – கஜேந்திரகுமார் உறவில் விரிசல் : கூட்டணியமைப்பதில் சிக்கல்?

புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் புதிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுரேஷ் பிரேமச்சந்திரனை தவிர்த்து விக்னேஸ்வரன் மாத்திரம் தமது தரப்புடன் இணைய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதற்கு நிபந்தனை விதித்து வந்தது.

பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த தரப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரனை விட்டு விக்னேஸ்வரன் வர தயாராக இருக்கிறார், தற்போது சுரேஷ் தரப்புடன் அவருக்கு கருத்து வேறுபாடுள்ளது என தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதையடுத்து இன்று(திங்கட்கிழமை) இரண்டு தரப்பும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்;டிருந்தன. நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருந்ததாக கூறப்படுகின்றது.

சி.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன், பேராசிரியர் வி.சிவநாதன் ஆகியோர் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்துகொள்ளவிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சட்டத்தரணிகள் சுகாஷ், காண்டீபன், மணிவண்ணன் ஆகியோர் முன்னணி சார்பிலும் கலந்துகொள்ளவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சுரேஷ் தரப்பை தவிர்த்து கூட்டணியமைக்க தயாரில்லையென்ற நிலைப்பாட்டை மத்தியஸ்தர்களிடம் விக்னேஸ்வரன் நேற்று மாலை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

சில்லறை காரணங்களை கூறி ஒவ்வொருவரை தவிர்த்தால் கடைசியில் தமிழ் மக்கள் அணிகளாகவே பிரிந்து நிற்க வேண்டி வருமென்றும் முன்னணிக்கு விளங்கப்படுத்துமாறு மத்தியஸ்தர்களிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும், சுரேஷ் தரப்பையும் இணைத்தால் கூட்டணிக்கு தயாரில்லையென முன்னணி விடாப்பிடியாக இருந்தது. இதையடுத்து இன்றைய சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்