விட்டுக்கொடுப்பு இருந்திருந்தால் பட்டிருப்பில் ஓர் எம்.பி. அதிகரித்திருக்கும்! – ஸ்ரீநேசன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டிருந்தால் பட்டிருப்புத் தொகுதியில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பட்டிருப்புத் தொகுதிக்குரிய செயலகம் களுவாஞ்சிகுடியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கலந்து கொண்டு செயலகத்தை திறந்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது என கூறுவதை விட நாங்கள் என்ன செய்தோம் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

எனவே எமது வேட்பாளர்களுக்குள் விட்டுக் கொடுப்புக்கள் இருந்திருந்தால் இந்த பட்டிருப்புத் தொகுதியில் கிடைக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்புரிமை நிச்சயமாக கிடைத்திருக்கும்.

பட்டிருப்புத் தொகுதியில் கடந்த காலத்தில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். 3 மாகாணசபை உறுப்பினர்கள் இருந்தார்கள்.

எனவே இவ்விடயத்தில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் தவறு செய்யவில்லை , மக்கள் சரியாகத்தான் செயற்பட்டிருக்கின்றார்கள். மக்கள் பக்கம் விரல் நீட்டுவதை விட நாங்கள் என்ன தவறு விட்டோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 63, 000 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. பின்னர் 2015 ஆம் ஆண்டு நாங்கள் போட்டியிட்டபோது 12, 0000 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

கட்சிக்கு வேட்பாளர்களாக புதிய முகங்கள் களமிறக்கப்படுகின்றபோது மக்கள் மத்தியில் புதிய இரத்தம் பாய்ச்சப்படுவது போன்று ஆதரிக்கின்றார்கள்.

எனவே புதிய முகங்களைக் கண்டு காழ்புணர்வு கொண்டால் நாங்கள் விட்ட பிழைகளைத்தான் விட்டுக்கொண்டிருப்போம்.

இன்னும் இன்னும் எமது கட்சிக்கு பற்றோடு செயற்படுகின்றவர்ளை மக்கள் ஆதரிக்கவேண்டும். வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றபோது சரியான ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுமிடத்தில் மீண்டும் ஒருமுறை கண்ணீர் வடிக்கவேண்டிய அவசியம் இல்லை.

நான் 48229 வாக்குகளைப் பெற்றவன் ஆனால் என்னையும் விட அதிகமாக வாக்குகளைப் பெறக்கூடியவர்களை எதிர்காலத்தில் தேர்தலில் களமிறக்க வேண்டும்.

எனக்கு 72 கோடி ரூபா நிதி அபிவிருத்திக்கு கிடைத்தது. இந்த நிதியை நான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொகுதிகளுக்குதி பிரித்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பகிர்ந்தளித்து வருகின்றேன்.

பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற பிரதிநித்துவம் இழக்கப்பட்டாலும் அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதியை நாம் ஒதுக்கீடு செய்து வருகின்றோம்.

இந்த பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள நாணமடு பாலம் 16 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நான் ஊழல் மோசடி செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை . கடந்த காலத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்தி செய்வதென்றால் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கொடுக்க வேண்டியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உண்மையாக இருப்பவர்கள் யாரும் இலஞ்சம் வாங்குவதில்லை. எங்களுக்கு இலஞ்சம் தருவதற்கு பலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் கை சுத்தமில்லாதவர்கள் எங்களிடமிருந்து தாவிவிடுகின்றார்கள்.

கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) காலத்தில்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற மட்டக்களப்புப் பல்கலைக் கழகத்திற்கு காணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுடைய கட்சிக்காரர்கள் சுத்தக்காரர்கள் போன்று கதைக்கின்றார்கள். எம்மைப் பார்த்து யாரும் விரல் நீட்டுவதற்கு லாயக்கு இல்லை .

தமிழ் தேசியக்கூட்டமைப்பு, யாரையும் கடத்தவில்லை, காணமாலாக்கவில்லை, சிறைப்பிடிக்கவில்லை, சித்திரவதைகள் செய்யவில்லை, பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கையோடு பயணிக்கின்றது.

விடுதலைப் புலிகள் போதைவஸ்த்து வியாபாரம் செய்யவில்லை என சரத் பொன்சேகா போன்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி விடுதலைப் புலிகள் போதைவஸ்த்து வியாபாரம் செய்ததாக தற்போது கொச்சைப்டுத்தும் பேச்சை சொல்கின்றார்.

தமிழரசுக் கட்சியை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்பதற்காக ஓரிரு ஊடகங்கள் செயற்படுகின்றன. இவ்வாறு சுயலாப அடிப்படையில் சில ஊடகங்கள் செயற்படுகின்றன.

ஊழல், இலஞ்சம், மோசடி செய்கின்றவர்கள் என்னோடு ஆத்திரத்தில் இருக்கின்றார்கள் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பட்டிருப்பு தொகுதியென்பது தமிழர்கள் அதிகம் வாழும் தமிழர்களின் கோட்டை என குறிப்பிடத்தக்கது.

சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் களுவாஞ்சிகுடி வட்டாரத் தலைவர் எஸ்.சண்முகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்