மண் அகழ்வை உடன் தடுத்து நிறுத்துங்கள்; மணற்காட்டைப் பாதுகாக்க முன்வாருங்கள்

யாழ். மாவட்ட அரச அதிபருக்கு
அக்கிராம மக்கள் அவசர கடிதம்

“வடமராட்சி கிழக்கு, மணற்காடு கிராமத்தைப் பாரிய அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இங்கு இடம்பெறும் மண் அகழ்வு நடவடிக்கைகளை உடன் தடைசெய்யுங்கள்.”

– இவ்வாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட அரச அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் மணற்காடு கிராம மக்கள்.

07.07.2019 எனத் திகதியிடப்பட்டு ‘பாரிய அனர்த்தங்களிலிருந்து கிராமத்தைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மணற்காடு கிராமம் பல மணல் மேடுகளால் சூழப்பட்டிருந்தது. மணல் பெருக்கத்தால் கிராமத்தின் ஆலயம், குடிசைகள் என்பன மணலால் மூடப்பட்டன. இதனைத் தடுக்கும் முகமாக 1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் பா.துரைரத்தினத்தால் சவுக்கங்கன்றுகள், சஞ்சீவி மரங்கள் என்பன நடப்பட்டன. இதன் காரணமாக காலப்போக்கில் கிராமத்தைச் சூழவுள்ள பகுதிகளில் மண் நகர்வின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டது.

இக்காலப் பகுதியில் வரையறையின்றி மணல் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மணல்மேடுகள் அழிவடைந்தன. 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தத்தால் இக்கிராமம் முற்றாக அழிவடைந்ததுடன் 72 உயிர்களும் காவுகொள்ளப்பட்டன. இதற்குப் பிரதான காரணம் இக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்வே ஆகும்.

சுனாமிக்குப் பின்னராக அமைக்கப்பட்ட குடியிருப்புகளும் கடல் மட்டத்திலிருந்து 5 அடி பள்ளத்திலேயே உள்ளன. மழைக் காலங்களில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குகின்றது. தொடர்ந்தும் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் எதிர்வரும் காலங்களில் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

எனவே, இக்கிராமத்தைப் பாரிய அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இவ்விண்ணப்பத்தைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் சமூக அக்கறையுள்ள ஆன்மீகத் தலைவர்களுக்கும் விடுப்பதோடு எமது கிராம மக்களின் அவசர வேண்டுதலைப் பதிவு செய்து மண் அகழ்வு நடவடிக்கைகளை உடன் தடை செய்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேச செயலர், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், வடக்கு மாகாண ஆளுநர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்டப் பணிப்பாளர், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர், யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, மணற்காடு கிராமசேவையாளர், யாழ். மறைமாவட்ட ஆயர், மணற்காடு பங்குத்தந்தை மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்ட குரு முதல்வர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்