சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது விக்கி தமிழரசில் இணைவதுவும் அவ்வாறே!

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது என்பது இயற்பியல்.

ஆகக் கூட்டமைப்பில் சேரக்கூடியவர்கள் எங்களோடு இணைந்து பயணிப்பது தான் பொருத்தமான விடயம். அதனடிப்படையில் விக்கினேஸ்வரன் ஏற்கனவே சம்பந்தனால் தான் இங்கே கொண்டு வரப்பட்டவர். ஆகவே அவர் சம்பந்தனோடு பேசி எங்களோடு இணைந்து கொள்வதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது.

ஆனால் அது சாத்தியமோ என்றும் எனக்குத் தெரியவில்லை. அது சாத்தியமாகாது என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எங்களுடைய இனத்தின் தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்று தான் நான் நம்புகின்றேன்.” (சிவிகே சிவஞானம் மூத்த துணைத் தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி)

விக்னேஸ்வரனை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வது என்பது சாத்தியமற்றது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஏறிவந்த ஏணியை உதைத்துத் தள்ளியவர்அன்னமிட்ட கையைக் கடித்தவர்வீட்டுக்கு வெளியே வந்து மாற்றத்துக்கு வாக்களியுங்கள் என்று அறிக்கைவிட்டு கட்சியின் முதுகில் குத்தியவர் –  இத்தியாதி சாமுத்திரிகா இலட்சணங்களைக் கொண்ட ஒருவருக்கு பாவமன்னிப்பு அளித்து அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வது என்பது  ஒருபோதும்  நடைபெறாது.   நடைபெறுமாயின் அது நெருப்புக் கட்டையைக் கொண்டு தலை சொறிந்தவன் கதையாக முடியும்.

கட்சியை விட்டுவிடுவோம்.  அவரது ஆட்சியில் வட மாகாண சபை குரங்கு கைப் பூமாலை ஆகியிருந்தது. தான் நியமித்த அமைச்சர்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்திஅவர் நியமித்த விசாரணைக் குழு அவர்களில் ஒருவரையே குற்றவாளியாகக் கண்ட போதிலும் மற்ற மூவரையும் பதவி துறக்கச் செய்து அரசியல் பழிவாங்கல் செய்தவர் விக்னேஸ்வரன். மேலும் ஐநாமேம்பாட்டு நிறுவனம் (UNDP) வட மாகாணத்தைச் சேர்ந்த கமக்காரர்களது தோட்டச்  செய்கைக்கு   அ.டொலர் 150 மில்லியன் (ரூா 3,100 கோடி) அன்பளிப்பாகக் கொடுக்க முன்வந்தபோது தனது மருமகன் நிமலனுக்கு அந்த நிறுவனத்தில்  வேலை கேட்டு (மாதம் அ.டொலர் 5,000 சம்பளம்) அது மறுக்கப்பட்ட போது அந்த உதவி நிதியை உதறித்தள்ளியவர்.  இப்படி ஏழைக் கமக்காரர்களின் வயிற்றில் அடித்த ஒரு புண்ணியவானை மீண்டும் தமிழ் அரசுக்கட்சியின் தலைமை சேர்த்துக் கொள்ளும் என்பது பகற் கனவு.  சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது என்பது இயற்பியல்.

 

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்,

மாண் இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,

வழுவாய் மருங்கின் கழுவாயும் உள‘ என,

நிலம்புடை பெயர்வதாயினும்ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என,

அறம் பாடின்றே ஆயிழை கணவ! (ஆலந்தூர் கிழார் – புறம் 34)

 

பொருள்: பெரிய அறங்களைச் சிதைத்தவர்க்கும் கழுவாய் உண்டு. ஆனால் ஒருவர் செய்த நன்றியை மறந்த வர்க்குக் கழுவாய் இல்லை. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்