தெரிவுக்குழுவை நிராகரித்தால் ஜனாதிபதி மீதும் சட்டம் பாயும்!

தெரிவுக்குழுவை நிராகரித்தால்
ஜனாதிபதி மீதும் சட்டம் பாயும்!

ரணில், கோட்டாவும் விசாரணைக்கு
அழைப்பு என சுமந்திரன் தெரிவிப்பு 

“உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.”

– இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

‘நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நான் ஏற்கப்போவதில்லை என்பதுடன், சாட்சியமும் வழங்கமாட்டேன்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், தெரிவுக்குழுவின் அழைப்பை ஜனாதிபதி நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கமுடியுமா என ‘தெரண’ தொலைக்காட்சி நேர்காணலில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தெரிவுக்குழுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சாட்சியமளிக்காவிட்டால் அவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஜனாதிபதியின் பதவிக் காலம் இன்னும் ஐந்து மாதங்களில் முடிவடைந்துவிடும். அதன்பின்னர் இந்த விவகாரம் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவுக்குழுவில் ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருக்கும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும் தெரிவுக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்