சோபா உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடாது – ஐ.தே.க. உறுதி

அமெரிக்க அரசாங்கத்துடனான சோபா உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, பிரதமர் செயலகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டை செய்துகொள்வது தொடர்பான எந்த முன்மொழிவும் பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டை செய்துகொள்ளும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, மிலேனியம் சவால் நிறுவனம் தொடர்பாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே கருத்து வெளியிட்டுள்ளார்.

மிலேனியம் சவால் நிறுவனத்தின் உதவி, ஒரு கொடை என்றும் இது நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “உண்மையில் நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அமெரிக்கா இதனை வழங்கியது. இதில் அச்சம் கொள்வதற்கு எதுவுமில்லை.

அரசாங்கம் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றும். எந்தவொரு வெளிநாட்டுடனும் உடன்பாடு செய்துகொள்ளப்படுவதற்கு முன்னர், நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவினால் ஆய்வு செய்யப்படும்.

அரசியல் நன்மைகளைப் பெறுவதற்காக, மிலேனியம் சவால் நிதியம் கொடையை வழங்குவதாக எதிர்க்கட்சி வதந்திகளைப் பரப்புகிறது.

மிலேனியம் சவால் நிறுவன உடன்பாடு, நாட்டின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டின் காணிகள் தொடர்பான தரவுகளை உருவாக்குவதற்கும் உதவக்கூடியது. இது எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு நன்மையளிக்கும்.

அபிவிருத்தி திட்டங்களுக்காக இதுபோன்ற கொடைகளை இலங்கை பெற்றுக்கொள்வது இதுதான் முதன்முறையல்ல. மகாவலி அபிவிருத்தி திட்டத்துக்கு பல நாடுகள் உதவியுள்ளன.

இது இலங்கைக்கும் அதன் குடிமக்களுக்கும் நன்மையளிக்கும் ஒரு திட்டம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்