கடும்போக்காளர்களின் வலையில் சிக்காத ஓர் அரசாங்கமே தேவை: அநுர

கடும்போக்காளர்களின் வலையில் சிக்காத ஓர் அரசாங்கமே தற்போது நாட்டுக்கு தேவையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அநுர தெரிவித்துள்ளதாவது,

“நாம் வீதிக்கு இறங்கியமைக்கு காரணம் இந்த அரசாங்கத்தை உடனடியாக பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஆகும்.

மேலும் மக்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கே ஆகும்.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது.

மேலும் எதிர்காலத்தில் மஹிந்தவுடன் இணைய போவதாக வெளியாகும் தகவல்களும் பொய்யானவையே

இதேவேளை 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முக்கிய பங்கு விகித்தது மக்கள் விடுதலை முன்னணியே ஆகும்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ரணில்- மஹிந்த ஆகியோர் 1 மணித்தியாலங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஆனால் இவை குறித்து மக்களுக்கு இதுவரை இருவரும் எந்ததொரு தகவலையும் வெளியிடவில்லை.

அந்தவகையில் 4 வருடங்கள் கடந்து விட்டன மஹிந்த இதுவரை வாய் திறக்கவில்லை.

நாங்கள் கூறுகின்றோம் அவர்கள் என்ன பேசினார்கள் என்று, தன்னையும் தனது குடும்ப உறுப்பினரையும் எப்படியாவது பாதுகாக்க வேண்டுமென்றே மஹிந்த ரணிலிடம் இதன்போது கேட்டுள்ளார்.

அந்தவகையில் மஹிந்தவை பாதுகாக்கும் வகையிலேயே ரணில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கிறார்.

இதேவேளை நாடு, தற்போதுள்ள அரசாங்கத்தினால் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் இந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” என அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்