தமிழ்-முஸ்லிம் தலைமைகள் கைகோர்க்க வேண்டும் – ஹரீஸ் வலியுறுத்து!

தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ தனித்து நின்று எதனையும் சாதிக்கமுடியாது. எனவே, தமிழ்-முஸ்லிம் தலைமைகள் மனம் திறந்து பேச வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “தேரர்கள் உண்ணாவிரதம் இருப்பதனால் எமது நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகிறது.

கண்டியில் ஒரு தேரர் இருந்த உண்ணாவிரதத்தினால் எழுந்த கொதிநிலையால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து எமது மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பினை ஏற்று நாங்கள் கூட்டாக  இராஜினாமா செய்தோம்.

தேசபற்று மிக்க இலங்கை முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்க மாட்டார்கள். ஆனால் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினாலும் பாதுகாப்பு இல்லை என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த தாக்குதலின் பின்னர் நாட்டில் இடம்பெற்றுவரும் சம்பவங்களை வைத்து முஸ்லிம்களின் சகல வர்த்தக நிலையங்களும் பொருளாதாரத்தில் பாரிய நஷ்டத்தை சந்தித்துள்ளன.

சில வசதி படைத்தவர்கள் மன உளைச்சல் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். இது எமது நாடு என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ தனித்துநின்று எதனையும் சாதிக்கமுடியாது. தமிழ்-முஸ்லிம் தலைமைகள் மனம் திறந்து பேச வேண்டும். நாங்கள் முட்டிக்கொண்டிருந்து எதனையும் சாதிக்க முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்