ஹேமசிறி, பூஜிதவுக்குப் பிணை!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 5 இலட்ச ரூபா சரீரரப் பிணையில் இவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் சட்டமா அதிபரின் உத்தரவுக்கிணங்க குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்னாண்டோவும், பொலிஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த பூஜித ஜயசுந்தரவும் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரு வைத்தியசாலைகளுக்கும் சென்ற கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன மேற்படி இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், இவர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இருவரும் குணமடைந்தவுடன் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கொழும்பு பிரதான நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்