தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்குமாறு தயாசிறிக்கு சபாநாயகர் ஆலோசனை!

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நாளை புதன்கிழமை ஆஜராகி சாட்சியமளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தெரிவுக்குழுவின் அழைப்பையேற்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தான் ஏன் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரிப்பதற்கான காரணத்தை விளக்கினார்.

அத்துடன், இந்த விடயத்தில் நீதிமன்றமும் தொடர்புபட்டுள்ளதால் தெரிவுக்குழுவுக்குச் செல்வது சரியா? பிழையா? என்பதை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்ட பின்னரே, இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

எனவே, தெரிவுக்குழு நடவடிக்கையை இடைநிறுத்த முடியாது. ஜனாதிபதியின் செயலாளரால் எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினேன். அதனை சபையில் சமர்ப்பிப்பதற்கான தேவை எழவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்பதே சிறந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் அது நாடாளுமன்றத்தை அவமதித்த செயலாகவே கருதப்படும்” – என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்