பிணைக்கு எதிராக மீள்பரிசீலனை மனு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமையை எதிர்த்து சட்டமா அதிபரால் மீள்பரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நிறைவு செய்யாத நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவினால் வழங்கிய பிணை அனுமதி உத்தரவை நீக்குமாறு கோரியே சட்டாமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவுக்கிணங்க ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்