அரசை ஆதரிப்பதா? இல்லையா? நாளைதான் கூட்டமைப்பு முடிவு – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை. நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு பொது எதிரணியின் உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

ஆனால், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவில்தான் பிரேரணையின் வெற்றி, தோல்வி  தங்கியுள்ளது.

இந்தநிலையில், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை சுமார் இரண்டு மணி நேரம் பேச்சு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே இந்தப் பேச்சுகளில் கலந்துகொண்டனர். இதன்போது, அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் எனப் பிரதமர் கோரியிருந்தார்.

தங்கள் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (நேற்று) கொழும்புக்கு வந்ததும் அது குறித்துத் தாங்கள் கூடி ஒரு முடிவை எடுத்து அறிவிப்பார்கள் என்று பிரதமரிடம் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுத்தீர்களா? என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போதிலும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை. நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் முடிவெடுக்கப்படும்” – என்று பதிலளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்