தாக்குதல்கள் குறித்து பிரதமர் மீது குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது – லக்ஷ்மன்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றங்களைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அத்தோடு, இனியும் இந்த விடயத்தை முன்னிருத்தி எவரும் இனவாதம் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் நாட்டில் வெளிவந்தன. புலனாய்வு அதிகாரிகள் குண்டுத்தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

ஆனால், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இதுகுறித்து திகதி ஏதும் கூறாமலே எச்சரிக்கை விடுத்ததாக உயர்நீதிமன்ற நீதியரசர், நேற்றைய வழக்கு விசாரணையின்போது தெரிவித்தார். அத்தோடு, இதுகுறித்து பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஏன் பாதுகாப்பு அமைச்சரை யாரும் குறை கூறவில்லை என்று கேட்க விரும்புகிறேன். பிரதமர் மட்டும்தானா இதில் குற்றவாளி? பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் இதற்கு பதில் கூறத்தானே வேண்டும்.

இந்த நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பிரதமருக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட ஒன்றாகவே நாம் கருதுகிறோம்.

அத்தோடு, குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை செய்ய ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ அழைத்தால் அவர்கள் சென்றே ஆகவேண்டும்.

இந்த தெரிவுக்குழு ஊடாகத்தான் தற்போது பல்வேறு விடயங்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. எனவே, இதற்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்பதையும் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 24 மணிநேரங்களுக்குள், அரசாங்கம் எனும் ரீதியில் நாம் துரிதமாக செயற்பட்டு தீவிரவாதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் செயற்பாடும் 99 வீதம் நிறைவடைந்து விட்டன.

எனவே, இனியும் இந்த விடயத்தை வைத்து இனவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்” என  மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்