உணவு ஒவ்வாமை – பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலையொன்றின்  மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

44க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 23 மாணவ, மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த பாடசாலையின் மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) திடீரென வயிற்று வலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல வருடங்களாக பாடசாலையில் உணவகம் நடத்திவரும் உசைன் என்பவரின் உணவகத்தில் உண்ட மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் உணவு ஒவ்வாமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாடசாலை உணவகத்தை தற்காலிகமாக மூடியதுடன், மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும் மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது பொது சுகாதார பரிசோதகர்கள், கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், அதிகமான மாணவர்கள் தாம் நூடுல்ஸ் மற்றும் உளுந்துவடை சாப்பிட்ட பின்னரே இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்