10 வருடங்களுக்கு பின்னர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள்!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதிகளில் பல வருடங்களின் பின்னர் தமிழ் மீனவர்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) முதல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர் நாட்டில் சுமூகமான சூழல் ஏற்பட்டதையடுத்து, மீண்டும் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மீள்குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்த நிலையில், குறித்த மீனவர்களை பெரியமடு மீனவர் சங்கத்தை சேர்ந்த சகோதர இன மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட அனுமதிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு கடந்த ஜனவரி மாதம் வவுனியா நீரியல்வள திணைக்களத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

எனினும், தமிழ் மீனவர்களை பெரியமடு குளத்தில் மீன்பிடிப்பதற்கு சகோதர இன மீனவர்கள் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், கடும் போரட்டத்திற்கு பின்னர், இரண்டு மீனவர்களுக்கான அனுமதி சகோதர இன மீனவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நீரியல்வள திணைக்களத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு தமிழ் மீனவருக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்