‘அம்மா என்றழைக்க என் மகனை திருப்பிக்கொடு’ – மன்னாரில் உறவுகள் போராட்டம்!

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டனர்.

‘இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒருநாள் நிச்சயம் வெளிவரும், ‘சர்வதேசமே எங்களுக்கான நிரந்தர தீர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தாருங்கள்’, ‘அம்மா என அழைக்க என் மகனை திருப்பிக்கொடு’, ‘மரண பதிவு வேண்டாம் மகனை தா’, ‘இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை திருப்பி தா’, ‘இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளும் காணாமலாக்கப்பட்டதோ?’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வமத தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட மன்னார் நகர சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் ஐ.நா. சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்