தமிழ் மக்களின் நலன்கருதியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம் -பிரபா கணேசன்

தமிழ் மக்களின் நலன்கருதியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. எதிர்காலத்தில் மேலும் பலர் இணையவுள்ளனர்.” – என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இதன்போது கலந்து கொண்டன.

இதில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான கூட்டணியே தவிர தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதொன்றல்ல.

ஆரம்பகட்டமாகவே இன்று சில கட்சிகள் இணைந்தன. எதிர்காலத்தில் வடக்கிலும், கிழக்கிலும் மேலும் பலர் இணையக்கூடும். மலையகம் மட்டுமல்ல வடக்கு, கிழக்கிலும் அரசியல் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி இருக்கின்றது. அக்கூட்டணி போல் நாம் விளம்பர அரசியலை நடத்த விரும்பவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகையுடன் 50 ரூபாவை பெற்றுக்கொடுத்தால் மட்டுமே அது சிறப்பாக அமையும். இல்லாவிட்டால் முற்போக்கு கூட்டணிக்கு பாரிய தோல்வியாக அது அமையும்.

அதேவேளை,தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு யார் முன்வருகின்றார்களோ அவர்களுக்கு எமது முழு ஆதரவும் ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்படும்.’’ என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்