அமெரிக்கா தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர்ச்சியாக போராட்டம் நடாத்திவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(வியாழக்கிழமை) மாலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், ‘தமிழ்தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எதனையும் செய்யப்போவதில்லை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தையும் அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திலும், இங்கு நடைபெற்ற படுகொலைகளுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கும் வல்லமை அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கின்றது.

அதனாலேயே மிக நீண்டநாட்களாக அமெரிக்க கொடியுடன் நீதிக்காக போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

எனவே அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டு எமக்கு சாதகமான நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக் கவேண்டும் என கேட்பதுடன், தமிழ்தேசிய கூட்டமைப்பினால் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உள்ளிட்ட எந்த வொரு விடயத்திற்கும் தீர்வினை காண முடியாது.

ஆகவேதான் தமிழரசு கட்சியின் மாநாட்டு மண்டபத்திற்கு முன் கூடிய நாங்கள் அங்கு போராட்டங்களை நடாத்தியிருந்தோம். ஆகவே அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டு எமக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்